சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு

விருதுநகர்: நவ. 9:
பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலானது தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு செல்ல ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை முதல் 14-ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலி பாறை ஓடை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
நீர்வரத்தின் அளவு குறைந்த பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் பக்தர்கள் கோவிலில் பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.