சந்திரசேகர ராவ் ஆட்சியில் 6,000 விவசாயிகள் தற்கொலை: நிர்மலா குற்றச்சாட்டு

ஹைதராபாத்: நவ.22 தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தெலங்கானாவில் இந்த தேர்தல் மிக முக்கியமானது. காலேஸ்வரம் அணை கட்டுவதில் சந்திசேகர ராவ் அரசு தவறிழைத்து விட்டது. அணை சரியாக கட்டப்படாததால் அதன் தூண்கள் சரியும் நிலையில் உள்ளன.
தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சந்திரசேகர ராவின் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரை மாநில முதல்வராக்குவோம். வருவாய் அதிகமாக இருக்கும் நிலையில் தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து ஆட்சி நடத்தும் சந்திரசேகர ராவால் தற்போது கடன் வாங்கும் நிலைக்கு தெலங்கானா தள்ளப்பட்டுள்ளது.
தலித் ஒருவரை முதல்வர் ஆக்குவோம் என சந்திரசேகர ராவ் கூறினார். அந்த வாக்குறுதி என்னவானது? இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம்ரூ.3,116 வழங்கப்படும் என சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்தார். அது என்னவானது? சந்திரசேகர ராவ் ஆட்சியில் இதுவரை 6 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அது ஏன்?இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.