சந்திராயன் 3 வெற்றி மூலம் பில்லியனரான ரமேஷ்

புதுடெல்லி, நவ. 25- உலகில் எந்தொரு நாடும் இதுவரை செய்யாத ஒன்று நிலவின் தென் துருவத்திற்கு அருகில் லேண்டர்-ஐ சாப்ட் லேண்டிங் செய்தது. இதன் மூலம் சந்திரயான் -3 மாபெரும் வெற்றி அடைந்து வல்லரசு நாடுகளின் வாயை அடைந்தது. இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான மைல்கல் ஆக பார்க்கப்படுவது மட்டும் அல்லாமல் பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனையில் இஸ்ரோ மற்றும் வீரமுத்துவேல் அணியின் பங்கு மிகவும் முக்கியமானது என்றாலும், சந்திரயான் -3 வெற்றி அடைய பல தனியார் நிறுவனங்கள் பணியாற்றியுள்ளது. அப்படி சந்திரயான் -3 திட்டத்திற்காக பல்வேறு கருவிகள், உபகரணங்களை சப்ளை செய்த 60 வயதான ரமேஷ் குன்ஹிகண்ணன் இப்போது பில்லியனர் ஆகியுள்ளார். மைசூரில் உள்ள கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா நிறுவனத்தின் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் மற்றும் அந்நிறுவனத்தின் நிறுவனர் தான் ரமேஷ் குன்ஹிகண்ணன். சந்திரயான் -3 ரோவர் மற்றும் லேண்டர் இரண்டையும் இயக்குவதற்கு பயன்படுத்தப்படும் மின்னணு அமைப்புகளை வழங்கியது கெய்ன்ஸ் டெக்னாலஜி நிறுவனம் தான். நவம்பர் 2022 இல் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதில் இருந்து கெய்ன்ஸ் டெக்னாலஜி பங்குகளின் விலை இதுவரையில் 3 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
சந்திராயன் 3 வெற்றியை தொடர்ந்து கெய்ன்ஸ் டெக்னாலஜி பங்குகள் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நிவையில் கெய்ன்ஸ் டெக்னாலஜி (Kaynes Technology) நிறுவனத்தில் ரமேஷ் குன்ஹிகண்ணன் சுமார் 64 சதவீத பங்குகள் வைத்திருக்கும் வேளையில், இவரின் நிகர சொத்து மதிப்பு 1.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கெய்ன்ஸ் டெக்னாலஜி நிறுவனம் 137 மில்லியன் டாலர் அளவிலான வருடாந்திர வருவாய் பெற்று வருகிறது. இதில் 50 சதவீதத்திற்கு மேல் PCB எனப்படும் பிரிண்டட் சர்க்யூட் போர்டு அசெம்பிளி உற்பத்தி செய்வதன் மூலம் பெறுகிறது. இதை தாண்டி ஆட்டோமொபைல், விண்வெளி, மருத்துவம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கு தேவையான மின்னணு அமைப்புகள் மற்றும் டிசைன் சேவைகளை வழங்குகிறது. இதில் முக்கியமாக கெய்ன்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் தயாரிப்புகள் எலக்ட்ரிக் வாகனங்கள், வென்டிலேட்டர்கள், ரயில்வே சிக்னல்களில் பயன்படுத்தப்படுகின்றன.