சந்தேஷ்காலி வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் கைது

கொல்கத்தா: பிப். 29:
சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷேக் ஷாஜகானை மேற்கு வங்க போலீஸார் இன்று (வியாழக்கிழமை) காலையில் கைது செய்தனர்.
ஷேக் ஷாஜகான் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் மினாகான் என்ற பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும், அவர் இன்று மதியம் 2 மணிக்கு பாசிர்ஹாட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் மினாகான் எஸ்டிபிஒ அமினுல் இஸ்லாம் கான் தெரிவித்தார். திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் இரண்டு மாநில போலீஸார் மற்றும் மத்திய விசாரணை அமைப்புகளை ஏமாற்றி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்தநிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸாரின் இந்த கைது நடவடிக்கை ஷாஜகான் ஷேக்கை சந்தேஷ்காலி வழக்கில் சேர்க்கும் படி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட மூன்று நாட்களுக்கு பின்னர் நடந்துள்ளது. பிப்.26-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி, “இந்த வழக்கில் பொது நோட்டீஸ் வழங்கப்படும். சந்தேஷ்காலி வழக்கில் தடை உத்தரவு எதுவும் இல்லை. அவரை கைது செய்யாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக, பிப்.23ம் தேதி நில அபகரிப்பு குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் வீடு உட்பட அரை டஜன் இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது.
இதனிடையே, ரேஷன் ஊழல் வழக்குத் தொடர்பாக ஜன.5-ம் தேதி ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த வந்த அமலாக்கத் துறை அதிகாரிகளை அவருடைய ஆதரவாளர்கள் தாக்கியதைத் தொடர்ந்து ஷாஜகான் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் சுமார் 50 நாட்களுக்கு பின்னர் போலீஸார் அவரைக் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.