சனாதன எதிர்ப்பை காங். கண்டிக்கவில்லை: கவுரவ் வல்லப் புகார்

புதுடெல்லி: ஏப். 5 :கூட்டணி கட்சி சனாதன எதிர்ப்பு குறித்து பேசும்போது அதனை காங்கிரஸ் கட்சி கண்டிக்கவில்லை என்று அக்கட்சியிலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் மீதான அதிருப்தியின் காரணமாக அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதன் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் தெரிவித்தார். இதுகுறித்து அவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் சனாதன தர்மத்துக்கு எதிராக பேசிய போது காங்கிரஸ் கட்சி அதனை கண்டிக்காமல் மவுனம் காத்தது. திசையில்லா பாதையை நோக்கி காங்கிரஸ் கட்சி சென்று கொண்டிருக்கிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை.
சனாதனத்துக்கு எதிரான கருத்துகளை கூறவோ, நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்பவர்கள் குறித்து அவதூறுகளை பேசவோ என்னால் இயலாது.
காங்கிரஸ் கட்சி அதன் அடிப்படை கோட்பாடுகளில் இருந்து விலகி தவறான இலக்கை நோக்கிசெல்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசும் காங்கிரஸ்மறுபக்கம் இந்து சமூகத்தை எதிர்க்கிறது. இது, மக்கள் மத்தியில் காங்கிரஸ் குறித்து தவறான பார்வையை விதைக்கிறது. காங்கிரஸ் ஒரு மதத்தை மட்டுமே ஆதரிக்கிறது என்கிற பிம்பத்தை மக்களுக்கு கடத்துகிறது. இது, காங்கிரஸின் அடிப்படை கொள்கைக்கே எதிரானது.
காங்கிரஸின் பொருளாதார கொள்கைகள் அனைத்துமே தேசத்துக்கான வளத்தை சேர்ப்பவர்களுக்கு எதிரானதாகவே உள்ளன.