சனாதன பேச்சு – உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி மார்ச் 4
சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பதாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கருத்து உரிமை பேச்சு உரிமையை உதயநிதி ஸ்டாலின் தவறாக பயன்படுத்தி இருப்பதாக உச்ச நீதிமன்றம் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளது. இது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய கருத்துக்கள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது
சனாதன தர்மம் குறித்து திமுக தலைவரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு, “உங்கள் உரிமைகளை நீங்கள் தவறாகப் பயன்படுத்திவிட்டீர்கள்” என்று உச்ச நீதிமன்றம் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் தனது கருத்துக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய மனுவை நீதிமன்றம் விசாரித்தது.
“உங்கள் உரிமையை நீங்கள் தவறாகப் பயன்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதன் விளைவுகளை நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு அமைச்சர், ஒரு சாமானியர் அல்ல” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அவருக்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தது இதற்கிடையே சனாதனம் குறித்து அவமதித்து பேசி இருக்கும் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது பற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள் தமிழக அமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து பேசி இருக்க வேண்டும் அவர் தனது பேச்சுரிமையை தவறாக பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறிய நீதிபதிகள் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தனர் இந்த வழக்கை மார்ச் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். என பேசியிருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.ஆனால் அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சு பாஜகவினரால் திசை திருப்பப்பட்டு பொய்யாக பரப்பிவிடப்பட்டது. அதாவது சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதாக வட இந்திய மாநிலங்களில் பரப்பிவிட்டது பாஜக. இதனால் பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் பலரும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன.இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தம் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி விட்டு தற்போது பாதுகாப்பு கோரி நீதிமன்றம் வந்துள்ளீர்கள் என நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் தரப்பு, சனாதன தர்ம ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கை எதிர்கொள்ள மாட்டோம் என தெரிவிக்கவில்லை. அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றுதான் கேட்டுள்ளோம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.இதனையடுத்து, நீங்கள் ஒரு சாமானியர் அல்ல. அமைச்சர் பதவி வகிப்பவர்; அமைச்சராக இருந்து கொண்டு பேசும் போது எதிர்விளைவுகளையும் உணர்ந்து பேச வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கின் விசாரணை மார்ச் 15-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.