சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 8 லட்சம் பேர் சாமி தரிசனம்

கேரளா: நவம்பர் . 29 – சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் கடந்த 14 நாட்களில் 8 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதானமான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை திருவிழா, கடந்த நவம்பர் 16-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 60 நாட்கள் நடைபெறும் இந்த பூஜைக் காலத்தில் முதல் நாளில் இருந்து சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. தொடர் கனமழை காரணமாக, கடந்த ஒரு சில நாட்களாக பக்தர்களின் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால், அப்போது வந்திருந்த பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமலும், வரிசையில் காத்திருக்காமலும் சாமி தரிசனம் செய்தனர்.
தற்போது மழை ஓய்ந்துள்ளதால், பக்தர்களின் கூட்டம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நடை திறக்கப்பட்டது முதல் இதுவரை 8லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். கார்த்திகையில் வரக்கூடிய 12ம் விளக்கு நேற்று முடிந்த காரணத்தால் இன்று முதல் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் வரக்கூடும். எனவே அங்கு போலீசார் மற்றும் சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை மூலமாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் கூடுதலாக 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.