சபரிமலையில் மண்டல பூஜை

சபரிமலை: , டிசம்பர் . 27 சபரிமலை எங்கும் சரண கோஷம் ஒலிக்கிறது. சந்தன வாசனையும் நெய் வாசனையும் எங்கும் மணக்கிறது. நெய் அபிஷேகம் குளிர குளிர ஐயப்பனுக்கு நடைபெறுகிறது. அதனை கண் குளிர தரிசனம் செய்கின்றனர் பக்தர்கள். மண்டலபூஜையை முன்னிட்டு தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டம் சன்னிதானத்தில் அலைமோதுகிறது. ஐயப்பன் கோவில்: சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்தாண்டு மண்டல கால பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் நவம்பர் 17ம் தேதி தொடங்கியது.

கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதால் இந்த ஆண்டு சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது.
ஐயப்பன் தரிசனம்: தினமும் சராசரியாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை பக்தர்கள் வந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு தரிசனத்திற்காக அணிவிக்கப்பட்டனர். ஐயப்பன் திருமேனிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்து வழிபட்டுள்ளனர். கடந்த வாரம் கற்பூர ஆழி பூஜை நடைபெற்றது.
ஊர்வலம்: இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து கடந்த 23ம் தேதி காலை ஊர்வலமாக சபரிமலை நோக்கி புறப்பட்டது. ஓமல்லூர், ரான்னி, பெருநாடு வழியாக நேற்று மதியம் இந்த ஊர்வலம் பம்பையை அடைந்தது. பம்பை கணபதி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த தங்க அங்கி வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சன்னிதானத்திற்கு புறப்பட்டது.