சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு நிகழ்ச்சி நாளை நடக்கிறது


சபரிமலை, மார்ச் 27-பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மாத பூஜையை முன்னிட்டு 19-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பிறகு அதன் தொடர்ச்சியாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் விழாவில், வழக்கமான பூஜைகளுடன், ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெற்று வந்தது. இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், நாளை காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பசாமிக்கு ஆறாட்டும் நடைபெறும்.
தொடர்ந்து மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
பின்னர் சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 14-ந் தேதி விஷு பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து 18-ந் தேதி வரை கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற உள்ளது.