சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறப்பு

திருவனந்தபுரம், ஜூலை 16- சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட இருப்பதால் 5 மாதங்களுக்கு பிறகு நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து நாளை முதல் வரும் 21ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு முன்பதிவு செய்த 5,000 பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவிருக்கின்றனர். 2 டோஸ் தடுப்பூசியுடன் 48 மணி நேர RT-PCR சோதனையில் நெகட்டிவ் இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, பக்தர்களின் வசதிக்கான சிறப்பு பேருந்துகளை இயக்க கேரளா அரசு முடிவு செய்திருக்கிறது. செங்கனூர் ரயில் நிலையத்தில் இருந்து பம்பை வரையிலும் பேருந்து சேவை அளிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக வைகாசி மற்றும் ஆனி மாத பூஜைகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு நாளை முதல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.