சபரிமலை நடை திறப்பு

சபரிமலை, நவ. 15- மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை 4:00 மணிக்கு மண்டலகாலம் ஆரம்பமாகிறது.
தமிழகத்தை விட ஒரு நாள் முன்னதாக கேரளாவில் கார்த்திகை ஒன்றாம் தேதி வருவதால் இன்று மாலை 5:00 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து தீபம் ஏற்றிய பின் 18ம் படி வழியாக சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து, அங்கு நிற்கும் புதிய மேல்சாந்திகள் சபரிமலை என். பரமேஸ்வரன் நம்பூதிரி, மாளிகைப்புறம் சம்பு நம்பூதிரி ஆகியோரை அழைத்து ஸ்ரீகோயிலுக்கு முன்பு வருவார்.
7:00 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரிக்கு அபிஷேகம் நடத்தி ஸ்ரீகோயிலுக்குள் அழைத்து செல்வார். இதுபோல மாளிகைப்புறம் கோயிலிலும் சடங்கு நடைபெறும். நாளை அதிகாலை 4:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கும். இந்த சீசனில் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இவர்கள் இரண்டு தடுப்பூசி அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் மற்றும் ஆதார் ஒரிஜினல் கார்டுடன் வரவேண்டும்.பம்பை கணபதி கோவில் அருகே உள்ள கவுண்டரில் கூப்பன் சரிபார்க்கப்பட்ட பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது.
பத்தணந்திட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. சபரிமலையில் பெய்த கனமழையால் இறுதி கட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.போலீசார், தீயணைப்பு வீரர்கள், டாக்டர்கள், சுகாதார ஊழியர்கள் இங்கு வந்து பொறுப்பேற்றுள்ளனர்.