சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு

லக்னோ, டிச. 27- இந்து மதம் என்பது ஒருவித ஏமாற்று வேலை என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுவாமி பிரசாத் மவுர்யா தெரிவித்துள்ளார். 2022-ல் நடைபெற்ற உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தேர் தலுக்கு முன்பாக பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தவர் சுவாமி பிரசாத் மவுர்யா. தற்போது உத்தரபிரதேச மாநில மேலவை உறுப்பினராக (எம்எல்சி) உள்ளார். மோகன் பாகவத் கருத்து: இவர் அடிக்கடி வித்தியாசமான கருத்துகளைக் கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.
இந்நிலையில் தற்போது இந்து மதத்தைப் பற்றி இந்துக்கள் மனம் புண்படும் வகையில் பேசி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இந்து மதம் என்பதே ஒருவித ஏமாற்று வேலைதான். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும், இந்துத்துவா என்பது மதமல்ல என்று ஏற்கெனவே கூறியுள்ளனர். இந்துத்துவா என்பது வாழ்க்கைக்கான ஒரு வழிதான் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர். இந்துத்துவா ஒரு மதமல்ல என்று ஒரு முறையல்ல 2 முறை பேசியிருக்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத். மோகன் பாகவத், பிரதமர் மோடி போன்றவர்கள் இவ்வாறு பேசினால், மக்களின் உணர்வுகள் புண்படுவதில்லை. ஆனால் நான் பேசினால் அந்தக் கருத்துகள் தவறாகிவிடுகின்றன. அது சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றன. உச்ச நீதிமன்றம் கருத்து: இந்துத்துவா ஒரு மதம் அல்ல என்று 1955-ல் உச்ச நீதிமன்றமே கருத்து வெளியிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சுவாமி பிரசாத் மவுர்யா, இதற்கு முன்பு இந்து மதம் என்பதே ஒரு புரளி என்ற வகையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.