சரத் பவார் படத்தை பயன்படுத்த அஜித் பவாருக்கு ‘பவர்’ இல்லை

புதுடெல்லி, மார்ச் 15- அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அரசியல் ஆதாயத்துக்காக சரத் பவாரின் புகைப் படங்கள் மற்றும் பெயரை தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி அவரின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது அப்போதுநீதிபதிகள் கூறியதாவது: சரத் பவாரின் பெயர், படங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற திட்டவட்டமான மற்றும் நிபந்தனையற்ற உறுதிமொழி எங்களுக்குத் தேவை. சரத் பவார் மனு தொடர்பாக அஜித் பவாரின் பதிலைக் கேட்டு வரும் சனிக்கிழமைக்குள் அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணை மார்ச் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. முன்னதாக, சரத் பவார் அணிக்கு தேசியவாதகாங்கிரஸ் கட்சி-சரத்சந்திர பவார் என்ற பெயர் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி7-ம் தேதி பிறப்பித்த அந்த உத்தரவு மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.மேலும், மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான குழுவை உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சியாக (என்சிபி) அங்கீகரித்து பிப்ரவரி 6-ம் தேதி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாகவும் அஜித் பவார் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.