சரியாக மூடப்படாமல் உள்ள ராஜ கால்வாய் கழிப்பறை குழிகள்

பெங்களூரு, நவ. 20: ஹெப்பாள் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜோகி கார்டன் கிட்டப்பா பிளாக்கில் சுமார் இரண்டாயிரம் பேர் வசித்து வருகின்றனர். அண்மைக்காலமாக அங்குள்ள‌ குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் இங்குள்ள ராஜ்கால்வாயில் உள்ள‌ சுமார் 15 முதல் 20 கழிப்பறை குழிகள் சரியாக செயல்படாமல் உள்ளது. அங்கிருந்து கழிவுநீர் வெளியேறி, அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து அப்பகுதி எம்.எல்.ஏவின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும், இந்த குழிகளை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இந்த பள்ளங்களை ராஜகால்வாயில் உள்ள‌ அடைப்புகளை நீக்க‌ பிபிஎம்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிப்பவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ராமமூர்த்திநகர் டி.சி.பாளைய பிரதான சாலையில் ராகவேந்திரா வட்டத்தை இணைக்கும் நான்கு நடைபாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் பிரதான வீதியில் நடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. வீடுகள், கடைகள், முன்பக்கங்களில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நடைபாதையை பிபிஎம்பி உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜெயநகர் விஜயா கல்லூரி அருகே நடைபாதையில் கேபிள் பெட்டி தொங்கி உள்ளது. இது நடைபாதையில் செல்லும் பொதுமக்களின் தலையில் அடிக்கிறது. இதனால், முதியவர்கள், பெண்கள், மாணவர்கள், பிரதான சாலையில் கீழே இறங்கி நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆபத்து ஏற்படும் முன், இந்த பெட்டியை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த நாராயண் தெரிவித்தார்.
நடைபாதையில் கட்டுமான கழிவுகள்
உப்பாரப்பேட்டை காளிதாஸ் மார்க்கத்தில் உள்ள நடைபாதையில் கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் இந்த நடைபாதை சீரமைக்கப்பட்டது. இதிலிருந்து உருவாகும் கட்டுமான கழிவுகள் இங்கு குவிக்கப்படுகிறது. இதனால் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். இங்குள்ள கழிவுகளை பிபிஎம்பி உடனடியாக அப்புறப்படுத்தி, பாதசாரிகளுக்கு நடந்து செல்வ‌தற்கு வழியை எளிதாக்க வேண்டும் என்று சிவராம் தெரிவித்தார்.
பனசங்கரி 6வது நிலை, 4வது டி பிளாக், பிடிஏ கட்டிடம், மின்கம்பம் சாய்ந்துள்ளது. இங்கு நாள்தோறும் மாணவர்கள், முதியோர்கள் மற்றும் பயணிகள் பலர் வந்து செல்கின்றனர். ஆபத்து ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை பெஸ்காம் அதிகாரிகள் அகற்ற வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கோரிக்கையாக உள்ளது.