சர்வதேச காலநிலை உச்சி மாநாட்டில் மோடி

துபாய் : டிச.1- சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு (வியாழன்) துபாய் சென்றடைந்தார். அவருக்கு துபாய் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சர்வதேசத் தலைவர்கள் பலரும் வருகை தந்துள்ள நிலையில் துபாயில் தொடங்கியுள்ள ஐ.நா.வின் COP28 மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெறும் சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்கள், சிந்தனை மையங்கள், தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், மாணவப் பிரதிநிதிகள் எனப் பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று (வெள்ளி) நடைபெறும் சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாtட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி காலநிலை தொடர்பான இன்னும் 2 உயர் மட்ட கருத்தரங்குகளின் கலந்து கொள்கிறார்.
துபாய் பயணத்துக்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், ”COP28 உச்சி மாநாடானது பாரீஸ் ஒப்பந்தத்தின்படி உலக நாடுகள் காலநிலை மாற்றம் தடுப்பு நடவடிக்கைகளில் எந்த மாதிரியாக முன்னேறியுள்ளன, எதிர்கால திட்டங்கள் என்ன?, அவற்றை செயல்படுத்தும் வழிமுறையகள் யாவை ஆகியன குறித்து ஆலோசிக்க வாய்ப்பளிக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
COP28 உச்சி மாநாடானது நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை துபாயில் நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் இந்த மாநாட்டை ஏற்று நடத்துகிறது. இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தைத் தடுப்பதில் கூட்டுமுயற்சியை வலியுறுத்தும் எனத் தெரிகிறது. அதேபோல் கரியமிலவாயு உமிழ்தலைக் கட்டுப்படுத்துவதில் உள்ள நிதிச் சிக்கல் பற்றியும் ஆலோசிக்கப்படவுள்ளது. வளர்ந்த நாடுகள் வறுமையில் உள்ள நாடுகளுக்கு காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்தல் பற்றியும் விவாதிக்கிறது.