சர்வதேச தரத்தில் பஸ் முனையம்

சென்னை: ஜன.2- சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கத்தில், 88.52 ஏக்கரில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில், ரூ.393 கோடியே 74 லட்சத்தில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள்: பேருந்து முனையத்தின் முகப்பு விமான நிலையம் போல் காட்சியளிக்கிறது. நாள்தோறும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்ல ஏதுவாக இடவசதி உள்ளது.
பிரதான கட்டிடத்தின் அடித்தளங்களில், 1000 கார்கள் மற்றும், 2 ஆயிரம் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுஉள்ளன. தாய்மார்கள் பாலூட்டும் அறை, திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பேருந்து நிலையத்துக்குள்ளேயே அவசர சிகிச்சை மையமும், மருந்தகமும், 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் வசதியும் உள்ளது. இதேபோன்று, பயணிகளுக்கான குடிநீர் வசதி, செல்போன் சார்ஜிங் வசதி, உணவகம், தேநீர் விடுதிகள் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும், மாநகர பேருந்துகள் வந்து செல்வதற்கென தனி நடைமேடைகளும் உள்ளன.
மாநகரப் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் பேருந்து நிலையத்துக்கு செல்ல எஸ்கலேட்டர் வசதி யும், அதிக பாரத்தை கொண்டு செல்ல லிஃப்ட் உள்ளிட்ட அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் மொத்தம், 6 லிஃப்ட்களும், 1 எஸ்கலேட்டரும் பயன்பாட்டில் உள்ளன.
இதேபோன்று பயணிகள் ஓய்வறை, ஓட்டுநர் – நடத்துநர் ஓய்வறை, பேருந்து பணிமனைகளும் இடம்பெற்றுள்ளன. பயணிகளின் பாதுகாப்புக்காக பேருந்து நிலையம் முழுவதும், 150 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலைய வளாகத்தில் புறநகர் காவல் நிலையமும், விநாயகர் கோயிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் வந்து, ஊரப்பாக்கம் – அய்யன்சேரி கூட்டு சாலை வழியாக மீண்டும் தேசிய நெடுஞ்சாலையை அடைய ஏதுவாக சாலை அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.