சவாரியை ரத்து செய்த பெண் பயணியை தாக்கிய ஆட்டோ டிரைவர்

பெங்களூரு, ஜன. 23: பெண் பயணியை தாக்கியதற்காக ரேபிடோ நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை பெல்லந்தூர் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் கங்காத‌ர பிரசாத் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பெல்லந்தூரில் உள்ள கிரீன் க்ளென் லேஅவுட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பெல்லந்தூரில் பேயிங் விருந்தினராக தங்கியிருந்த ஒடிசாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் பெண் பயணி, ஒயிட்ஃபீல்டில் உள்ள துபரஹள்ளிக்கு ரேபிடோ ஆட்டோவை முன்பதிவு செய்திருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை மேற்கோள் காட்டி போலீசார் கூறுகையில், ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்ததால் அவர் சவாரியை ரத்து செய்ததாகவும், இதனால் கோபம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் தன்னை தாக்கியதாக அந்த பெண் பயணி புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் நண்பர் என்று கூறிக்கொண்ட ராஜேஷ் பிரதான், எக்ஸில் (முன்னாள் ட்விட்டர்) சம்பவத்தின் விவரங்களைப் பகிர்ந்துகொண்டு, போலீசார் ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கையை கோரினார். பிரதான் எக்ஸில் பகிர்ந்துள்ள காட்சிகளில், அந்தப் பெண்ணுக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, இருவரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அவர் கீழே விழுவதும் பதிவாகி உள்ளது.
இதற்கிடையில், அந்த பெண் தன்னிடம் பைகளை ஆட்டோவிற்குள் வைக்கச் சொன்னதாகவும், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியதும், தன்னைத் துஷ்பிரயோகம் செய்து, தனது சட்டையின் காலரை இழுத்ததாகவும், அதனால், தன்னைத் தள்ளிவிட்டதாகவும் ஆட்டோ டிரைவர் போசாரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.