சவுக்கு சங்கரிடம் ரகசிய இடத்தில் விசாரணை

திருச்சி: மே 17: சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்த நிலையில், அவரிடம் ரகசிய இடத்தில் சங்கரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரி சங்கர், யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் காவலில் விசாரிக்க, சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமந்த், வழக்கின் உண்மைத் தன்மை மற்றும் முக்கிய ஆவணங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டியிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, சங்கரை ஒருநாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார்.
தொடர்ந்து, ரகசிய இடத்தில் சங்கரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு இன்று மீண்டும் நீதிமன்றத்தில் சங்கர் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.