சாங்லி அருகே பயங்கர விபத்து: பாகல்கோட்டைச் சேர்ந்த‌ 5 பேர் பலி

சாங்லி (மகாராஷ்டிரா), ஏப். 18:- விஜயப்பூர்-குஹாகர் நெடுஞ்சாலையில் நேற்று இரவு நடந்த விபத்தில், தனியார் பேருந்தின் பின்புறம் குரூசர் மோதியதில், பாகல்கோட்டையைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் மேலும் 11 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டியைச் சேர்ந்தவர்கள், சாங்லியின் தாஸ்கான் தாலுகாவில் உள்ள சவர்தே என்ற இடத்திற்கு திருமண விழாவுக்கு குரூசர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஜம்புல்வாடி கிராமத்திற்கு ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக பேருந்தின் பின்புறம் குரூசர் மோதியதில் அதன் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.
விபத்தில், குரூசர் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். வாகனம் நசுக்கியதால் இறந்த உடல்களை மீட்க அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் தல்கான் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு, முதன்மை சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் மீரஜில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.