சாண்ட்ரோ ரவி குஜராத்தில் கைது

அகமதாபாத்,ஜன.13- கடந்த பல நாட்களாக தலை மறைவாக இருந்து போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சாண்ட்ரோ ரவி குஜராத்தில் சிக்கினார்.
சட்டவிரோத வர்த்தகம் மற்றும் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான மஞ்சுநாத் என்ற சாண்ட்ரோ ரவியை கர்நாடக போலீசார் வெற்றிகரமாக கைது செய்து உள்ளனர்.மைசூர் போலீசார் கடந்த 11 நாட்களுக்கு முன்பு சாண்ட்ரோ ரவியை வலைவீசி தேடி வந்தனர். மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று விசாரணை நடத்தினார். மாநிலத்தில் இருந்து தப்பி குஜராத்தில் பதுங்கியிருந்த இவரை மைசூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். சொந்த போனைப் பயன்படுத்தாமல் போலீஸாருக்கு பெரும் சவாலாக திகழ்ந்த இவரது நடமாட்டத்தை சைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலீசார் கண்டுபிடித்தனர்.
ரவியின் போன் மற்றும் சாட்டிலைட் தகவலின் அடிப்படையில் மைசூரு போலீசார் உடுப்பி உள்பட மாநிலத்தின் பல பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
சாண்ட்ரோ ரவியின் கார் டிரைவர் கிரீஷை நேற்று காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர்
ராமநகர எஸ்பி சந்தோஷ்பாபு தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனை நடத்தி சான்ட்ரோ ரவியின் கார் டிரைவர் கிரீஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சாண்ட்ரோ ரவி வழக்கை விசாரிக்கும் போலீஸ் சிறப்பு படை சாண்ட்ரோ ரவியின் மனைவி வீட்டில் சோதனை நடத்தி டைரி மற்றும் கேஸ் பில் ஆகியவற்றைக் கைப்பற்றியது. அவரது முதல் மனைவி வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ரவியின் முதல் மனைவி வீட்டில் தனிப்படை போலீசார் 30 பேர் அதிரடி சோதனை நடத்தி டைரி, கேஸ் பில் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது