சாதிவாரி கணக்கெடுப்பு முதல்வர் தனித் தீர்மானம்

சென்னை: ஜூன் 26: சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின்.
தனித் தீர்மானம் கொண்டுவந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் சம வாய்ப்புகளையும், சம உரிமைகளையும் கொண்டவர்களாக மாற்றுவதன் மூலம் தான் உண்மையான பொருளாதார வளர்ச்சி அடைந்த சமுதாயமாக நாம் மாற இயலும். அந்த நோக்கத்தோடு தான் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய தளங்களிலும் அனைத்து தரப்பு மக்களிடையே ஒரு சமநிலையை கொண்டுவருவதற்காக இடஒதுக்கீடு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் தாழ்த்தப்பட்டோர், பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கே வளர்ச்சியடைய வழிவகை செய்து அதனை கடைப்பிடித்து வருகிறோம்.
சமீபகாலமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதே பேரவையில் நேற்றுமுன் தினம் கூட பாமக உறுப்பினர் ஜிகே மணி, சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும் என பேசினார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் திமுகவின் எண்ணமும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசுகிறேன். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் கீழ் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய பணி. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் பணி. மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்கள் அனைத்தும் இக்கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்பட்டு மத்திய அரசால் தொகுத்து வெளியிடப்படுகிறது.