சாமி சிலைக்கு இறைச்சி மாலை அணிவிக்க முயன்ற 2 பேர் கைது

பெங்களூர் : மார்ச். 14 – தொட்டபள்ளாபூர் மாவட்டத்தின் சிக்கமதுரேவில் உள்ள ஸ்ரீ சனி மஹாத்மா கோவிலில் ரோஜா மாலைக்குள் இறைச்சியை மறைத்து வைத்து சனீஸ்வரனுக்கு அணிவிக்க முயன்ற இரண்டு பேரை கடந்த சனிக்கிழமை போலீசார் கைது செய்துள்ளனர். ஹோசகோட்டே தாலூகாவின் கம்பனஹள்ளியை சேர்ந்த முனிராஜு (26) மற்றும் வொயிட் பீல்டு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சோமசேகர் ஆகிய இருவரும் சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு சனி பகவான் கோவிலுக்கு வந்துள்ளனர் . இவர்களை பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் இதே போன்ற செயலில் ஈடுபட முயற்சித்துள்ளனர். இவர்களை போலீசார் தேடி வந்தனர். இவர்கள் கொண்டு வந்த மாலை குறித்து ஊழியர்கள் வினவிய போது கடவுளுக்கு போட கொண்டுவந்ததாய் தெரிவித்துள்ளனர். ஆனால் மாலையை சோதனையிட்ட பொது ரோஜாக்களுக்கு கீழே மாமிச துண்டுகள் வைத்து கோர்த்திருப்பது தெரியவந்தது. கோவில் நிர்வாக தலைவர் பிரகாஷ் இது குறித்து கூறுகையில் தன்னுடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடவுளுக்கு மாலை செலுத்த இவர்கள் இருவர் வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது இவர்கள் இருவரும் பின்னர் போலீசிடம் ஒப்படைக்க பட்டுள்ளனர். ஆனால் போலீசார் இது குறித்து கூறுகையில் சனி பகவானின் கெட்ட பார்வை தங்கள் மீது இருப்பதால் அதிலிருந்து விலக சனி பகவானுக்கு இத்தகைய மாலையை சாத்துமாறு ஒரு ஹோசகோட்டேவில் உள்ள ஒரு போலி சாமியார் அறிவுறுத்தியதாகவும் தற்போது இந்த போலி சாமியார் தலைமறைவாயுள்ளதாகவும் தெரிவித்தனர் . கடந்த ஜனவரியில் முனிராஜூவும் சோமசேகரும் இதே போல் மாமிச மாலையை கோயிலுக்கு கொண்டுவந்துள்ளனர். ஆனால் கோயில் பூஜாரி உணவுக்கு சென்றிருந்ததால் மாலையை அங்கேயே விட்டு சென்றிருந்தனர்.