சாலையில் தொழுகை செய்தவர்களை தாக்கிய காவலருக்கு டெல்லி போலீஸ் கண்டனம்

புதுடெல்லி, மார்ச் 9- வெள்ளிக்கிழமை சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்கள் சிலரை போலீஸ் ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி பரபரபான நிலையில், அந்தச் சம்பவத்துக்கு டெல்லி போலீஸார் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லி போலீஸார் வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில், அந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது.
மேலும் சமூக நல்லிணக்கத்தை காக்கவும் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து டெல்லி வடகிழக்கு டிசிபி தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியில் வெளியிட்ட பதிவொன்றில், “டெல்லி வடகிழக்கு மாவட்ட மக்கள் சட்ட ஒழுங்கை பராமரிப்பதில் எப்போதும் போலீஸாருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். நாங்கள் இந்தர்லோக் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்து போலீஸாருக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் சமூக நல்லிணக்கத்தை பேணுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். அதே போல் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, அந்தச் சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை பதில் அளித்த இணை ஆணையர் (வடக்கு) மீனா, “தொழுகை நடத்தியவர்களை காவலர் தாக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்தப் போலீஸ் அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது” என்றார். முன்னதாக, டெல்லியில் இந்தர்லோகில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு ஏராளமானோர் கூடிய நிலையில், மசூதிக்குள் இடநெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக சிலர் சாலையில் நின்று தொழுகை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த டெல்லி போலீஸார், கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.
இதுகுறித்த வீடியோ காட்சியில், ஒரு போலீஸ் காவலர் முட்டிபோட்டு தொழுது கொண்டிருந்தவர்களை எட்டி உதைத்து தாக்குகிறார். போலீஸாரின் இந்தச் செயல் அங்கிருந்தவர்களிடம் கோபத்தைத் தூண்டியது. உடனடியாக அவர்கள் போலீஸாரைச் சூழ்ந்து கொண்டு அவர்களின் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.