சிஎஸ்கே அணித்தேர்வில் குழப்பம்.. ருதுராஜ் செய்த தவறு

ஐதராபாத், ஏப். 6- ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்ததற்கு அணி தேர்வில் நடந்த தவறு காரணமாக பார்க்கப்படுகிறது. ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்து அபார வெற்றியை பெற்றுள்ளது.இதனால் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 2வது தோல்வியை அடைந்துள்ளது.
இந்த தோல்விக்கு சிஎஸ்கே அணி தேர்வில் நடந்த குழப்பமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலர்களான முஷ்தாஃபிசுர் ரஹ்மான் விசா பிரச்சனை காரணமாக நாடு திரும்பி இருக்கிறார். அதேபோல் பதிரானா காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதனால் சிஎஸ்கே அணி தரப்பில் சமீர் ரிஸ்வி நீக்கப்பட்டு இவர்கள் மூவருக்கு பதிலாக தீக்சனா, மொயின் அலி மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதில் முகேஷ் சவுத்ரி இன்பேக்ட் பிளேயராக கொண்டு வரப்பட்டார். இதில் முகேஷ் சவுத்ரி வீசிய ஒரு ஓவரில் 27 ரன்கள் விளாசப்பட்டது. இதுவே ஆட்டத்தை ஐதராபாத் அணி பக்கம் திருப்பியது. அதேபோல் பேட்டிங் ஆர்டரிலும் ஜடேஜாவை முன்னதாக களமிறக்கி தவறான முடிவை சிஎஸ்கே அணி எடுத்தது. டாப் ஆர்டர் வீரரான மொயின் அலியை கடைசி வரை பேட்டிங் செய்ய அனுப்பாததும் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதேபோல் முகேஷ் சவுத்ரி-க்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் களமிறக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் ட்ராவிஸ் ஹெட், கிளாசன், மார்க்டம் போன்ற பவர் ஹிட்டர்களுக்கு ஷர்துல் தாக்கூர் போன்ற பவுலர்கள் சரியாக இருப்பார்கள். அதேபோல் தீபக் சஹரை போன்றே ஸ்விங் செய்யும் முகேஷ் சவுத்ரியை ஏன் சிஎஸ்கே அணி தேர்வு செய்தது, தவறு என்று ரசிகர்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது.