சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமே ருதுராஜ்- பிளெம்மிங் போட்ட இந்த மாஸ்டர்பிளான் தான்

தரம்சாலா, மே 6- 2024 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் போட்ட ஒரு இம்பேக்ட் வீரர் திட்டம் தான் இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக பேட்ஸ்மேன் ஒருவரை களமிறக்க வேண்டிய அவசியம் இருந்தும் சிஎஸ்கே அணி அதை செய்யவில்லை. அதற்கு மாறாக இம்பேக்ட் வீரராக ஒரு பந்துவீச்சாளரை களம் இறக்கியது சிஎஸ்கே அணி. இந்த திட்டம் தான் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்த போது விக்கெட்களை இழந்து தடுமாறியது. 12.4 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்து 5 விக்கெட்களை இழந்திருந்தது. மீதமுள்ள 8 ஓவர்களை பின்வரிசை வீரர்களைக் கொண்டு விளையாட வேண்டிய நிலையில் இருந்தது. இது போன்ற சந்தர்ப்பங்களில் மற்ற அணிகள் இம்பேக்ட் வீரராக ஒரு பேட்ஸ்மேனை களமிறக்கி விக்கெட் வீழ்ச்சியை ஈடு செய்து ஸ்கோரை உயர்த்த திட்டமிட்டு இருப்பார்கள். ஆனால், சிஎஸ்கே அணி மோசமான விக்கெட் வீழ்ச்சி அடைந்தும் அதை செய்யவில்லை. மாறாக 5 விக்கெட் இழந்த பின் மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்குர் போன்ற பந்துவீச்சாளர்களை களமிறக்கியது.
அவர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். அடுத்து ஒன்பதாம் வரிசையில் தோனி களம் இறங்கினார்.
அவரும் டக் அவுட் ஆனார். ஆனால் எந்த சூழ்நிலையிலும் சிஎஸ்கே அணி இம்பேக்ட் வீரராக சமீர் ரிஸ்வி போன்ற பேட்ஸ்மனை களம் இறக்கவில்லை. இந்த நிலையில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து பஞ்சாப் அணி சேஸிங் செய்த போது சிமர்ஜீத் சிங் இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்டார்.
இவர் வேகப்பந்துவீச்சாளர் ஆவார். சிஎஸ்கே அணியில் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களான தீபக் சாஹர், பதிரானா ஆகியோர் இந்த போட்டியில் இடம் பெறவில்லை. அவர்கள் இல்லாத நிலையில் ஆறாவது பந்துவீச்சாளராக சிமர்ஜீத் சிங்கை பயன்படுத்தியது சிஎஸ்கே அணி. ஒருவேளை ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே சிஎஸ்கே அணி பயன்படுத்தியிருந்தால் அது பந்துவீச்சாளர்களுக்கு சரியாக ஓவர்களை மாற்றிக் கொடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கும். பஞ்சாப் அணி அதை பயன்படுத்தி மிக எளிதாக திட்டமிட்டு சில பந்துவீச்சாளர்களின் ஓவர்களை மட்டும் குறி வைத்து ரன் குவித்து வெற்றியை நோக்கி சென்று இருக்கும். ஆனால், ஆறாவது பந்துவீச்சாளராக சிமர் ஜீத் சிங்கை களம் இறக்கியதால் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜால் பந்துவீச்சாளர்களை திறம்பட சுழற்சி முறையில் பயன்படுத்த முடிந்தது. இந்தப் போட்டியில் 10வது ஓவரில் பந்து வீசிய சிமர்ஜீத் சிங் பஞ்சாப் அணியின் ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்தினார். அந்த அணி அப்போது 69 ரன்கள் எடுத்த 5 விக்கெட் இழந்து கடும் அழுத்தத்துக்கு உள்ளானது. அதன் பின் அந்த அணி ரன் ரேட் அழுத்தத்தில் சிக்கி தோல்வி அடைந்தது.
அந்த வகையில் ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் ருதுராஜ் தீட்டிய இம்பேக்ட் வீரர் திட்டம் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.