சிஏஏ அமலுக்கு எதிராக செயல்படுவது மாநில அரசுகளால் சாத்தியமா

புதுடெல்லி, மார்ச் 13- ”மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதை நடைமுறைப்படுத்த எந்த வகையிலும் தமிழக அரசு இடமளிக்காது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்திருந்தார். அதேபோல் கேரளா, மேற்குவங்க அரசுகளும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், குடியுரிமை வழங்குதல் என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் அதிகார வரம்பின் கீழ் வருவதால் இதில் மாநில அரசின் நிலைப்பாடு என எதுவும் இருக்க முடியாது. மாநில அரசுகள் இதனை அமலாகவிடாமல் தடுக்கவும் முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் பகிர்ந்த விவரங்களின் சாராம்சம் பின்வருமாறு: கடந்த 2019-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. இதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது. சிஏஏ சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி, https://indiancitizenshiponline.nic.in/ என்ற இணையதளம் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வாயிலாகவே அனைத்து விண்ணப்பங்களும் பெறப்படும். இதை பரிசீலனை செய்ய உளவுத் துறை, அஞ்சல் துறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதால் சிஏஏ-வை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் தனியாக நிலைப்பாடு கொள்ள இயலாது என்று அந்த அதிகாரி தெரிவிக்கிறார்.