சிஏஏ அமல் பிஜேபி கொண்டாட்டம்

புதுடெல்லி: மார்ச் 12- சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் நேற்று உடனடியாக அமலுக்குவந்தது. இதுதொடர்பான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின்மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லிம் நாடுகள் என்பதால் சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. இதை ஏற்காமல் 2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்தபோராட்டங்களில் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில், சிஏஏ சட்டம் இயற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
குடியுரிமை நடைமுறைகள்: சிஏஏ சட்டம் தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சிஏஏ சட்டத்தின்படி யாருக்கு குடியுரிமை வழங்கலாம் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டினர் பிரிவு முடிவு செய்யும்.சிஏஏ சட்டம் தொடர்பாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அரசு அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
டெல்லியில் 144 தடை உத்தரவு: சிஏஏ சட்டத்தை எதிர்த்து கடந்த 2019-20-ல் டெல்லி ஷாகின்பாக்கில் நடந்த போராட்டங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதை கருத்தில்கொண்டு, ஷாகின்பாக்கில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சிஏஏ சட்டத்தை அமல்படுத்த கூடாது என வலியுறுத்தி அகில இந்திய அசாம் மாணவர்கள் கூட்டமைப்பினர் திப்ருகரில் நேற்று முன்தினம் 12 மணிநேரம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
அரசியல் தலைவர்கள் கருத்து: சமூக வலைதளத்தில் பாஜக நேற்று வெளியிட்ட பதிவில், ‘சிஏஏ உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மோடி அரசு தந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘சாதி, மதம், மொழியின் பெயரில் மக்களிடம் பிரிவினை ஏற்படுத்துவதை திரிணமூல் அனுமதிக்காது. சில நாட்களில் மத்திய அரசால் யாருக்கும் குடியுரிமை வழங்க முடியாது. இது தேர்தல் நாடகம்’’ என்று தெரிவித்தார்.காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப இவ்வாறு செய்துள்ளனர்’’ என்றார். கேரள முதல்வர் பினராயி விஜயன்,‘‘கேரளாவில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.