சிஏஏ சட்டத்தை உங்கள் பாட்டியால் கூட ரத்து செய்ய முடியாது: ராகுலுக்கு அமித்ஷா சவால்

புதுடெல்லி மே 9-
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) உங்கள் பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி பூமிக்கு திரும்பி வந்தால் கூட ரத்து செய்ய முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சவால் விடுத்தார்.
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ராமர் கோயில் விவகாரத்தில் 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போட்டு வந்தது. நாட்டு மக்களாகிய நீங்கள் பிரதமர் மோடியை இரண்டாவது முறையாக பதவியில் அமர்த்தினீர்கள். இதைத் தொடர்ந்து ராம ஜென்மபூமி தொடர்பான சட்டப் பிரச்சினையில் நாம் வெற்றி கண்டோம். அதுமட்டுமல்லாமல் மட்டுமின்றி, ராமர் கோயில் கட்டப்பட்டு பிராண பிரதிஷ்டையும் நடைபெற்றது. ராமர் கோயில் கட்டுவதற்கான அனைத்து தடைகளையும் பிரதமர் மோடி நீக்கினார்.
இந்த கோயில் திறப்பு விழாவில், எதிர்க்கட்சிகள் தங்கள் ஓட்டு வங்கிக்கு பயந்து கலந்து கொள்ளவில்லை. ராமர் கோயிலுக்காக வெட்கப்படுபவர்களை உத்தரபிரதேசம் ஒருபோதும் ஆதரிக்காது.ராமர் கோயில் விவகாரம் தேவையற்றது என உ.பி.யைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் கூறி வருகிறார். அந்தக் கோயிலால் பயனில்லை என்றும் அவர் கூறி வருகிறார். ஒருவேளை எதிர்க்கட்சியினர் (இண்டியா கூட்டணி) ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலுக்கு பாபர் பெயரைச் சொல்லி பூட்டு போட்டு விடுவார்கள்.
சிஏஏ சட்டத்துக்கு எதிராக ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் பேசி வருகின்றனர். ராகுல் காந்தியின் பாட்டி (இந்திரா காந்தி) பூமிக்கு வந்தால் கூட சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய முடியாது. இதை நான்சவாலாக சொல்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.