சிஏஏ விவகாரம் – மம்தா மீது பிஜேபி கடும் விமர்சனம்

கொல்கத்தா, மார்ச் 14- சிஏஏ அமல்படுத்தப்பட்டிருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான், இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்துக்கொள்ளவில்லை என்று மமதா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
இவரது கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
1955ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தின்படி, இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்க அச்சட்டம் வழிவகுத்தது. அதில் திருத்தம் செய்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிருத்துவர்கள் ஆகியோர் இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்க தற்போது இப்புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகுத்துள்ளது. இசுலாமியர்களை மட்டும் திட்டமிட்டுப் புறந்தள்ளிவிட்டு மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் திருத்தச்சட்டம் மூலம் இந்நாட்டின் அடித்தளமான மதச்சார்பின்மைக் கோட்பாடே முற்றுமுழுதாக துடைத்தெறியப்படும் என எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை விமர்சித்துள்ளன. இந்த சட்டத்தின் மூலம் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை தற்போது வழங்கப்படாது என்பதால், தமிழ்நாட்டில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு நிலவி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்துக்கொள்ளவில்லை என மமதா பானர்ஜி கூறியுள்ளார்.அதாவது, “வங்கதேசம், பாகிஸ்தானை போல ஆப்கானிஸ்தான் நமது நாட்டுடன் எல்லைகளை பகிர்ந்துக்கொள்ளவில்லை. இஸ்லாமியர்களை தவிர்த்து மற்ற மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவதை ஏற்க முடியாது” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இவரது கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதி, வடக்கு காஷ்மீர் எல்லையுடன் இணைந்திருக்கிறது. ஆனால், பாகிஸ்தானின் வரைபடத்தில், ஆப்கானிஸ்தானுடன் இணைந்திருக்கும் ஜம்மு காஷ்மீர் பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, பாகிஸ்தானை பொறுத்தவரை, இந்தியா ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்துக்கொள்ளவில்லை.