சிஏஜி அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் – காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: அக். 12-
ஒன்றிய அரசு திட்டங்களில் ரூ.7.50 லட்சம் கோடி இழப்பை அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், ஒன்றிய அரசின் 7 திட்டங்களில் ரூ.7.50 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக ஒன்றிய கணக்கு தணிக்கை துறை அறிக்கை தாக்கல் செய்தது. குறிப்பாக துவாரகா விரைவு சாலை திட்டத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு சாலை அமைக்க ஆகும் செலவை ரூ.18 கோடியில் இருந்து ரூ.250 கோடியாக அதிகரித்து மோசடி நடந்தாக கூறப்பட்டிருந்தது. இதேபோல் மோடி அரசின் 9 ஆண்டுகால ஆட்சியில் நடந்த பல்வேறு ஊழல்களை ஒன்றிய கணக்கு தணிக்கை துறை (சிஏஜி) அம்பலப்படுத்தி இருந்தது.
இந்த ஊழல்களை வௌிக்கொண்டு வந்த சிஏஜி அதிகாரிகள் 3 பேரை பாஜ அரசு இடமாற்றம் செய்துள்ளது. இதில் சிஏஜி உள்கட்டமைப்பு பிரிவின் முதன்மை இயக்குநர் அதூவா சின்கா, பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் ஊழல்கள் குறித்த தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார். இவர் தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அக்கவுன்ட்டென்ட் ஜெனரலாக மாற்றப்பட்டுள்ளார்.
சிஏஜியின் மத்திய செலவினங்கள் பிரிவின் தலைமை இயக்குநராக சூர்யகாந்த் சிர்ஷாத் பதவி வகித்து வந்தார். இவர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தணிக்கை செய்து முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். இந்நிலையில் சூர்யகாந்த் சிர்ஷாத் தற்போது சிஏஜியில் காலியாக இருந்த சட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முறைகேட்டை சிஏஜி வடமத்திய மண்டல இயக்குநராக இருந்த அசோக் சின்ஹா வெளிப்படுத்தினார். அவர் தற்போது சிஏஜி அலுவல் மொழி இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், “மோடி அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் அதிகாரிகளை அச்சுறுத்துவது அல்லது அவர்களை பணியில் இருந்து அகற்றுவதே பாஜவின் தொடர் செயல்பாடாக உள்ளது. பாஜவின் ஊழல்கள் விவகாரத்தில் மோடி மாஃபியா பாணியில் செயல்படுகிறார். ஒன்றிய கணக்கு தணிக்கை அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவுகளை அரசு உடனே திரும்ப பெற வேண்டும். ஆயுஷ்மான் பாரத், துவாரகா விரைவு சாலை, பாரத்மாலா உள்ளிட்ட ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.