சிங்கப்பூர் சென்று திரும்பியவரால் சீனாவுக்கு சிக்கல்: கோவிட் பரவலால் ஊரடங்கு அமல்

பீஜிங், செப். 15- சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கோவிட் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவிய பெருந்தொற்று, கடந்த இரு ஆண்டுகளாக உலகையே உலுக்கி வருகிறது.
சீனா முழுவதும் கோவிட் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக சீன அரசு கூறி வந்தது. இதனால் சர்வதேச விமான போக்குவரத்தை சீனா தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜியாங்கு, செச்சுவான், லியானிங், ஹுனான், ஹுபெய் உட்பட 18 மாகாணங்களில் கோவிட் வைரஸ் மீண்டும் பரவியது. இதையடுத்து அங்கு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது சீனாவின் தென்கிழக்கு மாகாணமான புஜியனில் கோவிட் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளதாவது:
புஜியன் மாகாணத்தின் புட்டியன் நகரில் 32 லட்சம் பேர் வசிக்கின்றனர். அந்த நகரை சேர்ந்த ஒருவர் அண்மையில் சிங்கப்பூருக்கு சென்று திரும்பினார். அவருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். வீட்டுக்கு சென்ற பிறகு அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது 12 வயது மகன் அருகில் உள்ள பள்ளியில் படிக்கிறார். அந்த மாணவர் மூலம் 36 மாணவர்களுக்கு தொற்று பரவி உள்ளது. இதைத் தொடர்ந்து புட்டியன் நகரில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல புஜியன் மாகாணத்தில் மின்னணு பொருட்கள் உற்பத்தி மையமான ஜியாமென் நகரில் நேற்று 56 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அந்த நகரில் 45 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில் அங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.