சிசிபி வலையில் சந்தேக தீவிரவாதி

பெங்களூர்: ஜூலை. 25 –
பாதுகாப்பான நகரம் என்றே பெயர் பெற்ற மாநிலத்தின் தலைநகர் தீவிரவாதிகளின் அடைக்கல நகரமாய் மாறி வருவது அதிர்ச்சியை தந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தான் ஸ்ரீராமபுரத்தில் தீவிரவாதி ஒருவன் பிடிபட்டான்.
இந்த நிலையில் நேற்று இரவு மற்றொரு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு தீவிரவாதி திலக் நகரில் பதுங்கியிருந்ததை சி சி பி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
பல நாட்களாக நகரின் திலக் நகரில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த தடை செய்யப்பட்ட லக்ஷர் ஏ தொய்பா இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த தீவிரவாதி குறித்து தகவல்களை சேகரித்த சி சி பி போலீசார் நேற்று இரவு நடவடிக்கையில் இறங்கி அவனை கைது செய்வதில் வெற்றியடைந்துள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அக்தர் ஹுசேன் கைது செய்யப்பட்ட குற்றவாளியாயிருக்கும் நிலையில் இவனுடன் தொடர்பில் இருந்த மேலும் மூன்று பேரை தங்கள் வசம் எடுத்துள்ள போலீசார் இவர்களிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர் என சி சி பி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திலக் நகரின் பி டி பி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் அக்தர் பல நாட்களாக வசித்து வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதே அறையில் இருந்த மற்ற மூன்று இளைஞர்கள் உணவு டெலிவரி பணியில் இருந்துள்ளனர். இவர்கள் நான்கு பேரும் இரவு நேரத்தில் மட்டும் வெளியில் நடமாடிவந்துள்ளனர் . தவிர அக்கம்பக்கத்தில் எவருடனும் இவர்கள் தொடர்புகளை வைத்துக்கொண்டிருக்க வில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது .
சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகள் அடங்கியிருப்பது குறித்து நம்பகமான தகவல்களை பெற்ற சி சி பி போலீசார் 30க்கும் அதிகமான தங்கள் சிப்பந்தியர்களுடன் நேற்று மாலை ஐந்து மணியிலிருந்தே வீட்டின் அருகில் காத்து உட்கார்ந்திருந்துள்ளனர். பின்னர் ஏழு மணியளவில் அக்தர் ஹுசைன் வீட்டுக்கு வந்துள்ளான். பின்னர் ஒன்று கூடிய சி சி பி போலீசார் சோதனை நடத்தி சநதேகிக்கப்பட்ட தீவிரவாதியை கைது செய்து மேலும் இவனுடைய கூட்டாளிகள் மூவரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி அக்தரை ரகசிய இடத்தில் வைத்து சி சி பி போலீசார் விசாரனை நடத்தி தகவல்களை சேகரித்துவருவதுடன் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் விசாரணைக்கு தங்கள் வசம் எடுத்து தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளனர் . கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக திலக் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியிருப்பதுடன் குற்றவாளி எந்தெந்த இயக்கங்களுடன் கை கோர்த்து பணியாற்றி வந்துள்ளான் , தவிர நகரில் மேலும் எவரெவருடன் தொடர்பு வைத்துள்ளான் போன்ற தகவல்களை சி சி பி போலீசார் விசாரிக்க துவங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் முஜாஹிதீன் தலைவனாயிருந்த தாலிப் ஹுசைன் என்பவன் கைது செய்யப்பட்டான் . ஸ்ரீநகரில் இருந்து ஸ்ரீராமபுரத்தில் வந்து தலைமறைவாயிருந்த அவனை என் ஐ ஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ள அதே நேரத்தில் சி சி பி போலீசாரும் தங்களுக்கு கிடைத்த தகவல்களின் பேரில் மேலும் ஒரு தீவிரவாதியை கைது செய்துள்ளனர்.