கோவை: ஜூலை 2 பிறந்த குழந்தைகளின் நஞ்சுக்கொடியில், பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை, கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள், சுற்றுப்புற சூழல்களில் மாசுக்களாக கலந்துள்ள பிளாஸ்டிக் துகள், மனிதர்களின் ரத்தத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்தனர். இதனால், மனிதர்களுக்கு ஏற்பட உள்ள நோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சிகள் பல்வேறு தரப்பில் நடந்து வருகின்றன.
கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியில், பிறந்த குழந்தைகளின் உடல்களில் பிளாஸ்டிக் நுண்துகள் உள்ளதா என்பதை அறிய, மூன்று மாதத்துக்கு முன், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வை துவக்கினர். குழந்தைகளிடம் ரத்தம் எடுக்காமல், வீணாகும் நஞ்சுக்கொடிகளை சேகரித்து, அதில் உள்ள ரத்தத்தை ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆராய்ச்சிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையிலேயே, பிளாஸ்டிக் நுண்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.