பெங்களூர், செப்டம்பர் 5- முடா எனப்படும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் நில ஒதுக்கீடு வழக்கில் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எந்தவொரு தவறும் இல்லை என ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். தேசாய் தலைமையிலான ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. மேலும், இந்த முறைகேடுகளுக்கு அரசு அதிகாரிகளே காரணம் என்றும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் முடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் என்ற அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பு அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்திருந்தது. அதில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றங்களிலும் கூட விசாரணைகள் நடந்தன. விசாரணை அறிக்கை இதற்கிடையே இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். தேசாய் தலைமையிலான ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. 2020- 2024 ஆண்டுகளுக்கு இடையில் மைசூரில் சித்தராமையா குடும்பத்தினர் சட்டவிரோத மாற்று நில ஒதுக்கீடு மோசடி குற்றச்சாட்டுகளைத் தேசாய் ஆணையம் விசாரித்தது. அதில் இழப்பீடாக நிலங்களை ஒதுக்குவது சட்டவிரோதம் என்று கூறமுடியாது என ஆணையம் தெரிவித்துள்ளது.. மாற்று நிலம் வழங்கப்பட்டதில் 2017இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உரிய முறையில் செயல்படுத்தப்படவில்லை என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. தவறில்லை இது குறித்து அமைச்சர் எச்.கே. பாட்டீல் கூறுகையில், “நாங்கள் இது குறித்து விசாரிக்க நீதிபதி பி.என். தேசாய் ஒரு நபர் ஆணையத்தை அமைத்திருந்தோம். அவர்கள் தங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தனர். அதில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.. சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அது கோரியுள்ளது. கர்நாடக அமைச்சரவை அந்த அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொண்டோம்” என்றார்.
அதிகாரிகள் இது தொடர்பாகக் கூறுகையில், “சித்தராமையா மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோரை ஆணையம் விடுவித்துள்ளது..
கேசரே கிராமத்தில் பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்திற்கு ஈடாக 14 மனைகள் ஒதுக்கப்பட்டதில் சித்தராமையா குடும்பத்தினர் மீது தவறில்லை என அந்த அரிக்கையில் கூறப்பட்டுள்ளது.” என்றனர். பின்னணி பார்வதியின் நிலங்களுக்குப் பதிலாக மைசூரில் விஜயநகர் லேஅவுட் 3வது மற்றும் 4வது கட்டங்களில் ஒதுக்கப்பட்ட இழப்பீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும், இந்த இழப்பீடு நிலங்கள் அவரது அசல் நிலத்தை விட அதிகச் சொத்து மதிப்பு கொண்டவை என்பதே குற்றச்சாட்டின் அடிப்படையாகும். இந்த விவகாரம் எழுந்த போது பாஜக உள்ளிட்ட அங்குள்ள எதிர்க்கட்சிகள் இதைப் பெரிய விவகாரமாக எழுப்பின.










