சித்ரதுர்காவில் பாழடைந்த வீட்டில் 5 பேரின் எலும்பு கூடுகள்

சித்ரதுர்கா : டிசம்பர். 29 – பாழடைந்த வீடு ஒன்றில் ஐந்து பேரின் எலும்புகூடுகள் சந்தேகத்துக்குரிய நிலையில் தென்பட்டிருப்பது நகர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது நகரின் மைய பகுதியிலேயே இந்த வீடு இருந்திருக்கும் நிலையில் யாருடைய கவனத்திற்கும் இது தெரியாத நிலையில் இது மேலும் பல்வேறு சந்தேகங்களுக்கு காரணாமாகியுள்ளது. நகரின் செல்லக்கெரே கேட் அருகில் உள்ள பழைய பெங்களூர் வீதி ஓரத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் ஐந்து எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொட்டசித்தவ்வனஹள்ளியின் ஜகநாத் ரெட்டி என்பவருக்கு சொந்தமான வீடு இதுவாகும். இவர் மாநில பொதுப்பணித்துறை இலாகாவில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். வீட்டின் முன்னர் ஓய்வு பெற்ற பொறியாளர் என பெயர் பலகை உள்ளது. வீட்டில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து எலும்புக்கூடுகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஜகநாத் ரெட்டி , அவருடைய மனைவி பிரேமா மற்றும் இவர்களின் மகள் இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜகநாத் ரெட்டிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்துள்ளனர் . தவிர குடும்பத்தாருக்கு தீவிர உடல் நிலை பாதிப்பு இருந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஜகநாத் ரெட்டியின் மனைவிக்கு ஏற்பட்ட உடல் நல குறைவுக்கு இவர் 2 கோடி ரூபாய்கள் செலவு செய்தும் பலனளிக்கவில்லை. இவர்கள் வெளி நபர்களை வீட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை. வீட்டின் கதவை திறக்காமல் வெறும் ஜன்னலிலேயே பேசி அனுப்பிவிடுவர் என அக்கம்பக்கத்தார் தெரிவித்துள்ளனர். 2022க்கு பின்னர் இந்த வீட்டில் இருந்தவர்கள் யாருக்கும் தென்படவில்லை. வீட்டில் பிராணவாயு சிலிண்டரும் இருந்துள்ளது. இந்த நிலையில் தற்போது எலும்புக்கூடுகள் கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவரா , இவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது இவர்களின் சாவுக்கு உடல் நிலை சரியில்லாதது காரணமா தவிர நான்கு ஆண்டுகள் கழிந்தும் இறவைகளின் சாவு குறித்து எவருக்கும் விஷயம் தெரியாதது எப்படி என அனைத்து கேள்விகளுக்கும் போலீஸ் விசாரணைக்கு பின்னரே பதில் கிடைக்கும். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து ஆய்வு நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். தவிர தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து சோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.