
இஸ்லாமாபாத், ஜூலை 4- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது முதலே பாகிஸ்தான் அச்சத்தில் இருக்கிறது. சில காலம் இதை நிலை தொடர்ந்தால் தண்ணீர்ப் பஞ்சத்தால்.. நிலைமை மோசமாகும் என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும். இதனால் கிடைக்கும் இடத்தில் எல்லாம் இது குறித்து பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் பேசியே வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் முக்கியமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக உண்மையாக நடவடிக்கை எடுக்கும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. பாகிஸ்தானுக்குச் சிரமம் இந்தியாவின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது.
இதற்கிடையே சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீண்டும் இந்தியா செயல்படுத்த வேண்டும் என்று இந்தியாவிடம் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு கடந்த மே மாதம் இந்த ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. சர்வதேச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு இந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருப்பதையே காட்டுவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. சிந்து நதிகளில் இந்தியா திட்டமிட்டிருந்த இரு திட்டங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்து பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியிருந்தது. இது தொடர்பான விசாரணை முடிந்து ஜூன் கடைசி வாரம் சர்வதேச நீதிமன்றம் இதற்கான தீர்ப்பை அளித்திருந்தது. ஆனால், சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை இந்தியா அங்கீகரிக்கவில்லை. இந்தியா கடந்த வாரம் இந்தத் தீர்ப்பைத் திட்டவட்டமாக நிராகரித்தது. கிஷன்கங்கா மற்றும் ராட்டில் நீர்மின் திட்டங்கள் தொடர்பாக பாகிஸ்தான் எழுப்பிய ஆட்சேபணைகள் மீதான தீர்ப்பை ஏற்கப் போவதில்லை என வெளியுறவுத் துறை குறிப்பிட்டது.