சிமோகா வனவிலங்கு சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்க முடிவு

ஷிவமொக்கா, ஆக. 24: ஷிவமோக்கா மாவட்டம் ஷெட்டிஹள்ளி வனவிலங்கு சரணாலயத்தின் 700 சதுர கி.மீ பரப்பளவை 395 ஆக குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற மத்திய வனவிலங்கு வாரியத்தின் 73வது நிலைக்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, ஷெட்டிஹள்ளி அருகே உள்ள வனப்பகுதிகளில் உள்ள உரிமை தொடர்பான பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. சரணாலயத்தின் எல்லைக்குள், நகரப் பகுதிகள், கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களைச் சேர்க்க 1974 இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவின் 50வது கூட்டத்தில் சரணாலயத்தின் வரம்பை மறுஅறிவிப்பதற்காக முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. சரணாலயத்தின் எல்லையை மாநில அரசு திருத்தியமைத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் வரைவு முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும் என்று நிலைக்குழு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக கர்நாடக அரசு எல்லை சீராய்வுக் குழுவை அமைத்து, அதனிடம் அறிக்கை பெற்றது. 1974ல் சரணாலயத்தின் எல்லை நிர்ணயம் அறிவியல் பூர்வமற்றது. நில‌ப்பகுதிகளும் சரணாலயத்தில் சேர்க்கப்பட்டன. இதனால், மக்கள் அவதிப்படுகின்றனர். எல்லையை திருத்தினால் சரணாலயத்தை நிர்வாகம் செய்வதற்கு எளிதாக‌ இருக்கும் என்று குழு அறிக்கை அளித்தது. அதன் பிறகு கர்நாடக அரசு வரைவு அறிவிப்பை தாக்கல் செய்தது. இந்த வரைவு முன்மொழிவு நிலைக்குழுவின் 72வது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சரணாலயத்தின் முன்மொழியப்பட்ட எல்லையை மறுபரிசீலனை செய்ய முதன்மை தலைமை வன பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் வனவிலங்கு வாரிய அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளுடன் தொடர் கூட்டங்களை நடத்தினர். முன்மொழியப்பட்ட விருப்பத்தின் மூலம் இணைப்பு பிரச்சினையும் தீர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கருத்து தெரிவித்தனர். பத்ரா புலிகள் காப்பகத்தின் காப்புப் (இடையக) பகுதியின் கீழ் கொண்டு வருவதற்கான முன்மொழிவுக்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.