சியாச்சின் அருகே சீனா அமைக்கும் சாலை

புதுடெல்லி: மே 4:
சியாச்சின் பனிமலைக்கு வடக்கே சாக்ஸ்கேம் பள்ளத்தாக்கில் 5180 சதுர கி.மீ இந்திய பகுதியை பாகிஸ்தான் கடந்த 1963-ம் ஆண்டு சீனாவுக்கு சட்டவிரோதமாக வழங்கியது.
தற்போது இந்த சாக்ஸ்கேம் பள்ளத்தாக்கில் சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொள்கிறது. இந்த சாலையை சாக்ஸ்கேம் பள்ளத்தாக்கின் மேல் பகுதிவரை சீனா நீட்டித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.
சீனா அமைக்கும் புதிய சாலை 16,333 அடி உயர்த்தில் உள்ள சாக்ஸ்கேம் பள்ளத்தாக்கில் அகில் கணவாய் வழியாக செல்கிறது.
இதன் மூலம் காரகோரம் கணவாய் பகுதிக்கும் இணைப்பை ஏற்படுத்த முடியும்.
இந்த இணைப்பு ஏற்படுத்தப்பட்டால், இங்கிருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள குஜேராப் கணவாய் பகுதிக்கும் சாலை அமைக்க முடியும்.
இவ்வாறு மேல் சாக்ஸ்கேம் பள்ளத்தாக்கு வரை சாலையை சீனா விரிவுபடுத்தினால், சியாச்சினில் உள்ள இந்திய ராணுவத்தினர் தென் பகுதியில் பாகிஸ்தானிடமிருந்தும், வடபகுதியில் சீனாவிடமிருந்தும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும்.
ஆக்கிரமிப்பு சாக்ஸ்கேம் பள்ளத்தாக்கில் சாலை அமைக்கும் திட்டத்தை சீனா விரிவுபடுத்தினால், சியாச்சின் பனிமலைப் பகுதியில் நீண்ட கால பாதுகாப்பு திட்டங்களில் இந்திய ராணுவம் கவனம் செலுத்த நேரிடும்.
சியாச்சின் பனிமலைப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாமுக்கு அழுத்தம் கொடுக்கவே சாக்ஸ்கேம் பள்ளத்தாக்கில் சாலை அமைக்க சீனா விரும்புகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் சிறப்பு பிரதிநிதி பேச்சுவார்த்தை குழுவில் இப்பிரச்சினையை இந்தியா எழுப்பியுள்ளது.