சிறப்பு படையினர் மூலம் சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை

மைசூரு,ஜன. 23- சிறுத்தை தாக்கி சிறுவன் சாவு மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகாவில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஹொரலஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெயந்த் என்ற 11 வயது சிறுவனை சிறுத்தை அடித்து கொன்றது. கடந்த 4 மாதங்களில் 4 பேரை சிறுத்தை அடித்து கொன்றுள்ளது. இதனால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்காத வனத்துறையினர் மீது மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர். இந்த நிலையில் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா சுத்தூர் மடத்தில் நடந்த தேர் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வந்தார். அப்போது அவரிடம், சிறுத்தை அட்டகாசம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- சிறப்பு படையினர் மூலம்… டி.நரசிப்புராவில் சிறுத்தை தாக்கி 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது. சிறுவனின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன். டி.நரசிப்புராவில் கடந்த 4 மாதங்களில் 4 பேரை சிறுத்தைகள் தாக்கி கொன்றுள்ளன. அங்கு ஏற்கனவே 2 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது. குடியிருப்பு பகுதியில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வனப்பகுதியில் சிறுத்தைகளை தேடும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த சிறப்பு படையினர் மூலம் சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள கிராமங்களில் துப்பாக்கி ஏந்திய சிறப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கலெக்டரிடம் பேசி உள்ளேன். சிறுத்தைகளை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

https://www.dailythanthi.com/News/India/operation-to-capture-leopards-by-special-forces-884221
https://www.dailythanthi.com/News/India/operation-to-capture-leopards-by-special-forces-884221