சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: அக்டோபர் . 21 – ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது, பயணிகள் சிரமமின்றி செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் வரும் திங்கட்கிழமை 23ம் தேதி ஆயுதபூஜை பண்டிகையும் மறுநாள் 24ம் தேதி விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைளுக்கு முன் சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகம் செல்வர்.
மேலும் தொடர் விடுமுறை வருவதால் பலர் சுற்றுலா செல்ல வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வர். அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்வதன் காரணமாக, பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு போக்குவரத்து
துறை தரப்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முதல் நாளை 22ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 2,265 சிறப்பு பேருந்துகளும், கோவை, திருப்பூர், பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 1,700 பேருந்துகளும் இயக்க போக்குவரத்து துறை தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பைபாஸ் பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது