சிறுபான்மை சமூகங்களுக்கு துணையாக இருப்போம்: ராகுல்

ஹிங்கோலி: நவம்பர். 12 – காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாத யாத்திரை 65வது நாளான நேற்று மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தை அடைந்தது. அப்போது தம்மை வரவேற்ற சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகளுடன் ராகுல் காந்தி உரையாடினார். அவர்கள் மத்தியில் பேசிய அவர், சிறுபான்மை சமூக மக்கள் தனியாக இல்லை. தங்கள் உரிமைகளை பாதுகாக்க போராடும் அவர்களுடன் துணை நிற்போம் என்று உறுதியளித்தார். இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்களும் தாக்கப்படுகிறார்கள், இந்த சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழி பயத்தைப் போக்க வேண்டும், ஏனெனில் பயம் மனதில் மட்டுமே உள்ளது என்றும் ராகுல் குறிப்பிட்டார். தன்னை போன்று பலர் அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று அவர் கூறினார்.
முன் எப்போதும் இல்லாத வகையில் நீதித்துறை நிறுவனங்கள் அச்சுறுத்தப்பட்டு வருவதால், அரசியலமைப்புச் சட்டம் இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ராகுல் காந்தியின் நடை பயணத்தில் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.வான ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். ராகுலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது பேசிய அவர், நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஆபத்தில் இருப்பதால், கருத்தியல் வேறுபாடுகள் இருந்த போதும் ராகுல் காந்தியுடன் இணைந்ததாக கூறினார். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி மாநிலத்திலும், நாட்டிலும் நடந்து வருகிறது. இதற்கு எதிராக, நாங்கள் சாலையில் இறங்கியுள்ளோம். இது ஜனநாயகத்திற்கு நல்ல அறிகுறி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.