சிறுமியுடன் திருமணம் செய்து கொண்ட‌ புகார்: இளைஞர் தற்கொலை

பெங்களூரு, ஆக. 17: மைனர் சிறுமியுடன் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததையடுத்து, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இளைஞர் ஒருவர், மைனர் சிறுமியை திருமணம் செய்த சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கு காரணமான அனைத்து நபர்களையும் அடையாளம் காட்டிய செல்ஃபி வீடியோவை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.கர்நாடக மாநிலம் விஜயபுராவில் உள்ள பசவனா பாகேவாடியைச் சேர்ந்தவர் சசிதர் (24). இவர் பெங்களூரு காட்டன்பேட்டையில் உள்ள லாட்ஜில் ஒன்றில் ஆக. 14-ஆம் தேதி தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார். மைனர் சிறுமையை திருமணம் செய்து கொண்டது தொடர்பாக அவர் மீது புகார் அளிக்கப்பட்ட‌ நிலையில், ஆக. 11-ஆம் தேதி பெங்களூரு வந்து, ஆக. 14 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சிறுமியை 6 ஆண்டுகளாக சசிதர் காதலித்து வந்த‌தாகவும், 10 நாட்களுக்கு முன்பு தான் அந்தச் சிறுமியை திருமணம் செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சிறுமியின் பெற்றோர், தங்களின் மகளை திரும்ப அழைத்துச் சென்றதோடு, சசிதர் மீது போலீசில் புகார் அளித்தனர். புகாரையடுத்து தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் பெங்களூரு வந்த‌ சசிதர், ஒரு வீடியோ பதிவை உருவாக்கி, தான் திருமணம் செய்து கொண்ட சிறுமியுடனான தனது உறவை விவரித்தார். பின்னர் அந்த‌ வீடியோ பதிவை இணையதளத்தில் வெளியிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.அந்த வீடியோவில், சிறுமியின் குடும்பத்தினர் தங்கள் உறவை ஏற்கவில்லை என்றும், வெவ்வேறு சாதிகள் காரணமாக தன் மீது வழக்குப் பதிவு செய்ததாகவும் சசிதர் தெரிவித்தார். தனது தற்கொலைக்கு சிறுமியின் பெற்றோர், உறவினர்கள்தான் பொறுப்பு என்று அதில் தெரிவித்திருந்தார்.