சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கட்டிட மேஸ்திரிக்கு 39 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரி, ஜன.13-
சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் கட்டிட மேஸ்திரிக்கு 39 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில்பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வாலிப்பட்டி அருகே உள்ளது நத்தகயம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் ஆசைத்தம்பி (வயது 31). கட்டிட மேஸ்திரி. அதே பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கட்டிட மேஸ்திரியின் உறவினர் ஆவார்.
இந்த நிலையில் அந்த சிறுமி 6-ம் வகுப்பு படிக்கும்போதே ஆசைத்தம்பி அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து வந்தார். கடந்த 30-1-2018 அன்று அந்த சிறுமியை ஆசைத்தம்பி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதையடுத்து அந்த சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 16.5.2018 அன்று அவரை பரிசோதித்தபோது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு ஓசூரில் உள்ள பெண்கள் காப்பகம் ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை முறைப்படி தத்து கொடுக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
போலீசாரின் விசாரணையில் சிறுமிக்கு தந்தை இல்லை என்பதும், தாய் மட்டும் உள்ளதும், சிறுமியை மிரட்டி அடிக்கடி அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. மேலும் ஆசைத்தம்பிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆசைத்தம்பியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார்.
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட ஆசைத்தம்பிக்கு போக்சோ பிரிவின் கீழ் 14 வருட சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 14 வருட சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டிய குற்றத்திற்காக ஒரு வருட சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் என மொத்தம் 39 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.61 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த சிறை தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார்.