சிறையில் கொசுக்களை பிடித்து கோர்ட்டுக்கு கொண்டு வந்த தாதா

மும்பை, நவ. 5 – மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளி இஜாஜ் லக்டவாலா. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை கடந்த 2000-ம் ஆண்டு போலீசார் மராட்டிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்டத்தின் (மோக்கா) கீழ் வழக்குப்பதிவு செய்து நவிமும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் சிறையில் கொசு தொல்லை மிதமிஞ்சி இருப்பதால், தனக்கு கொசுவலை வழங்க உத்தரவிட கோரி மும்பை செசன்ஸ் கோர்ட்டில் லக்டவாலா மனு செய்து இருந்தார். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது லக்டவாலா கோர்ட்டில் அஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதியிடம், “சிறையில் கொசு தொல்லை பொறுக்க முடியவில்லை, இதோ பாருங்கள்… சிறையில் பிடித்த கொசுக்களை கொண்டு வந்து இருக்கிறேன்” என்று பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைத்திருந்த செத்துப்போன கொசுக்களை லக்டவாலா காட்டினார். “என்னை போல தான் மற்ற கைதிகளும் கொசு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள், ஆனால் பாதுகாப்பு காரணத்தை சுட்டிக்காட்டி சிறை அதிகாரிகள் கொசுவலை தர மறுக்கிறார்கள். சிறையில் கொசுவலை பயன்படுத்த அனுமதிக்க சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று நீதிபதியிடம் கைதி லக்டவாலா கேட்டுக்கொண்டார்.