
டெல்லி: அக். 2: மகாத்மா காந்தியின் 155வது பிறந்த நாளான இன்று டெல்லியில் அவரது நினைவிடத்தில் மலர் தூவி பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் இது தொடர்பாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் “காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம்” என்று கூறியுள்ளார்.
காந்தி ஜெயந்தியான இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் தனது x சோஷியல் மீடியா பக்கத்தில் “காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம்” என்று கூறியுள்ளார். முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இயக்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
அதாவது, “அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தூய்மையை வலியுறுத்தி காந்தியடிகளுக்கு நாம் தூய்மை இயக்கத்தின் மூலம் அஞ்சலி செலுத்த வேண்டும். இதன்படி அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிக்கு நாடு முழுவதும் மாபெரும் தூய்மை இயக்கம் நடத்தப்படும். இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். அதன்படி ஹரியான மாநிலத்தை சேர்ந்த அங்கித் எனும் உடற்பயிற்சி ஆர்வலர் மற்றும் மல்யுத்த வீரருடன் சேர்ந்து நேற்று தூய்மை பணியை மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து இன்று காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் தனது x சோஷியல் மீடியாக பக்கத்தில் “மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். காந்தியின் காலத்தால் அழியாத போதனைகள் நம் பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன. மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது, அது ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒற்றுமை, இரக்க உணர்வை மேலும் வளர்க்க தூண்டுகிறது. காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம் – பிரதமர் நரேந்திர மோடி. இளைஞர்களுக்கு ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் வகையில் அவரது எண்ணங்கள் உதவட்டும்” என்று கூறியுள்ளார்.
இவரைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்கள் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.