சிறையில் சந்திரபாபு நாயுடு உயிருக்கே ஆபத்து: மகன் குற்றச்சாட்டு

ராஜமுந்திரி: அக்டோபர் : 14 ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக 73 வயதாகும் சந்திரபாபுவை சிஐடி போலீஸார் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கைது செய்தனர். ராஜமுந்திரி மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடு கடந்த 34 நாட்களாக உள்ளார்.
சிறையில் அதிக வெப்பம் மற்றும் போதிய வசதிகள் இல்லாததால் சந்திரபாபுவுக்கு தோல் ஒவ்வாமை மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபோதும் அவர்குணமாகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சந்திரபாபுவை அவரது மனைவி புவனேஸ்வரி, மருமகள் பிராம்மனி ஆகியோர் நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர். இதன் பிறகு புவனேஸ்வரி கூறும்போது, “எனது கணவருக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க ஆந்திர அரசு தவறிவிட்டது. அவரது எடை 5கிலோ குறைந்துள்ளது. எடைமேலும் குறைந்தால் அவரது சிறுநீரகம் பாதிக்கும் வாய்ப்புள்ளது. உயிருக்கே ஆபத்தாக முடியும்” என்று கவலை தெரிவித்தார்.சந்திரபாபு மகனும், தெலுங்கு தேசம் பொதுச் செயலாளருமான லோகேஷ் கூறும்போது, ‘‘எனது தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஊக்க மருந்து கொடுக்க ஜெகன் அரசுமுயற்சிக்கிறது. அவரது உடல்நிலை குறித்து அதிகாரிகளோ இந்த அரசோ முழுமையாக தகவல் தெரிவிப்பதில்லை. சிறையில் கொசு தொல்லை உள்ளது. குடிநீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்யாதது போன்றவற்றால் எனதுதந்தைக்கு ஒவ்வாவை, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பும் போதுமானதான இல்லை. அவருக்கு ஏதேனும் நேரிட்டால் அதற்கு முதல்வர் ஜெகன்மோகன் தான் முழு பொறுப்பு’’ என்றார்.