சிறை வளாகங்களை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம்

சென்னை : நவ 20-மத்திய சிறை வளாகத்தில் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை தொடங்க தமிழக சிறைத்துறை முடிவு எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறை வளாகங்கள் ஏற்கனவே சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தற்போது சிறை வளாகம் முழுவதும் கண்காணிக்க டிரோன் கேமராக்கள் பயன்படுத்த சிறைத்துறை முடிவு செய்துள்ளது. சுற்றுச்சுவர் உட்பட சிறை வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசுக்கு சிறைத்துறை அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளது.
சிறைகளில் மோதல்கள், கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுக்க டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். இந்த டிரோன் கேமராவை பறக்கவிட்டு அதன் மூலம் கண்காணிப்பதன் மூலம் சிறை வளாகத்தில் நடக்கும் அனைத்து காட்சிகளையும் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் அத்துமீறல்கள் குறைய வாய்ப்பு உள்ளது. அத்துடன் கைதிகள் சில அடாவடி செயல்களில் ஈடுபட்டால் அவற்றை ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிப்பதன் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.இதனால் அவர்கள் அதுபோன்ற செயலில் ஈடுபடுவதை தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது. எனவே விரைவில் டிரோன் கேமரா வாங்கப்பட்டு அதை சிறை வளாகத்தில் பறக்கவிட்டு கண்காணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.