சிலந்தி ஆறு தடுப்பணை பணி தீவிரம்

உடுமலை: மே 23- தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணியை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு பாம்பாறு, சின்னாறு, தேனாறு, சிலந்தி ஆறு ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்கள் ஆகும். இந்நிலையில், வட்டவடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டிவருகிறது. முதல்கட்டமாக ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 120 அடி நீளம், 10 அடி உயரத்தில் கட்டுமானப் பணி நடந்து வருகிறது.இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’நாளிதழில் செய்தி வெளியானதைஅடுத்து, கேரள அரசு தடுப்பணை கட்ட தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும், இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய வனவிலங்குகள் வாரியத்திடம் கேரளஅரசு அனுமதி பெற்றுள்ளதா என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் அமர்வு, கேள்வி எழுப்பியதுடன், மே 24-ம் தேதி (நாளை) இரு மாநில அரசுகள், தங்கள் வாதத்தை முன்வைக்க உத்தரவிட்டுள்ளது.
ஆனாலும், தடுப்பணை கட்டும்பணியை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. வட்டவாடா பகுதியில் நேற்று பலத்த கனமழைக்கு இடையிலும் கனரக வாகனங்கள், கலவை இயந்திரங்களைப் பயன்படுத்தி, கட்டுமானப் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
`இடுக்கி பேக்கேஜ்’ திட்டம் மூலம் 8 இடங்களில் தடுப்பணை கட்ட, கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வட்டவாடா பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கட்சிகள் எதிர்ப்பு: இதுகுறித்து மடத்துக்குளம் எம்எல்ஏ சி.மகேந்திரன் (அதிமுக) கூறும்போது, ‘‘பசுமைத் தீர்ப்பாயம் நடவடிக்கை எடுத்துள்ளபோதும், தமிழகத்தில் இருந்து நீர்வளத் துறை உயரதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்யாதது ஏன்? பெயரளவில் கடைநிலை ஊழியர்களை அனுப்பியது சரியா? விரைவில் கட்சித் தலைமையின் ஆலோசனைக்குப் பிறகு, திமுக அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும்,’’ என்றார்.