சிலரின் ஆணவத்தால் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வருகிறதுகுலாம் நபி ஆசாத்

புதுடெல்லி: பிப். 15:சிலரது பலவீனம் மற்றும் ஆணவத்தால் காங்கிரஸ் முடிவுக்கு வருவது துரதிர்ஷ்டவசமானது என்று முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் அண்மையில் மும்பையில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அசோக் சவானின் இந்த விலகல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவருமான, குலாம் நபி ஆசாத், “காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் விலகிவிட்டதால் அக்கட்சி விவகாரங்கள் குறித்து பேச விரும்பவில்லை. அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். காங்கிரஸ் கட்சியில் அசோக் சவானின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரது தந்தையும் அக்கட்சியில் பெரிய தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர்.
இது அவர்களுக்கு மிகப்பெரிய அடி. உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற பெரிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வந்துவிட்டது. சிலரது பலவீனம் மற்றும் ஆணவத்தால் காங்கிரஸ் முடிவுக்கு வருவது துரதிர்ஷ்டவசமானது” என்று தெரிவித்தார்.காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்த ஆசாத், அந்தக் கட்சியின் அகில இந்திய அரசியல் விவகாரக் குழுவில் உறுப்பினர், காஷ்மீரின் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.கடந்த 2022ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி தனியாக கட்சி தொடங்கினார்.