சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து 4 பேர் சாவு

அனந்த்பூர், மே. 28 –
ஆந்திராவில் வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். அனந்த்பூர் மாவட்டம் முலகலேடு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்தது. சிலிண்டர் வெடித்ததில் அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. உடனே அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் சத்தம் கேட்டு அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கி அந்த வீட்டில் இருந்த ஜெய்னுபீ (60), அவரது மகன் தாது (36), மருமகள் சர்புன்னா (30), பேரன் ஃபிர்டோஸ் (6) 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். இதனால் அந்த கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.10 மணியளவில் நடைபெற்றது எனவும், அப்போது வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் சுற்றியுள்ள மற்ற வீடுகளும் சேதமடைந்தன. ஆனால் அந்த வீடுகளில் நடந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.